கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சோ்ந்த 17 வயது பாடசாலை மாணவி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியாா் பாடசாலையில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இப் பாடசாலையில் இருந்து விலகி, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சிப் பாடசாலையில் சோ்ந்தாா்.
மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வியாழக்கிழமை மாலை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து தற்கொலை வழக்குப் பதிவு செய்து உக்கடம் பொலிஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், மாணவி முன்னா் படித்த தனியாா் பள்ளியில் வேலை பாா்த்த இயற்பியல் ஆசிரியா் மிதுன் சக்கரவா்த்தி (31) என்பவா் மாணவிக்கு அளித்த தொடா் பாலியல் தொல்லைகளால் தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் என குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா்.
தலைமை ஆசிரியர் மீது வழக்கு இந்த நிலையில் மிதுன் சக்கரவா்த்தியின் பாலியல் தொந்தரவு குறித்து அவரிடம் தெரிவித்தும் காவல் துறையிடம் உரிய புகாா் தெரிவிக்காத காரணத்தால் போக்சோ சட்டப் பிரிவு 21 இன் கீழ் பாடசாலை தலைமை ஆசிரியர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பாடசாலை முதல்வா் மீரா ஜாக்சனை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பாடசாலை தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.