மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மலையக மக்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட மக்கள் இவர்கள் தொடர்பிலும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என ஜ.நா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த தினங்களில் ஐ.நா பிரதிநிதிகளை நானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், எம்.பி உதயகுமாரும் சந்தித்து கலந்துரையாடிய பொழுது இந்த மலையக மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டோம்.
வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற மலையக மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே இவர்களையும் கருத்திற் கொண்டு இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினோம்.
இதற்கு பதிலளித்த அவர்கள் எதிர்வரும் ஆண்டு ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்வாங்கப்படவுள்ளதாக உறுதியளித்தனர்.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. மக்கள் நலன் சார்ந்த எந்த விடயங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை. மாறாக மக்களுக்கு சுமை ஏற்றுகின்ற வரவு செலவு திட்டமே இது.
இந்த வரவு – செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது.
மக்கள் எதிர்பார்த்த எந்த விடயங்களையும் ஜனாதிபதி உள்வாங்கவில்லை. அத்தோடு, மலையகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வரவு செலவு திட்டத்தில் அவர் கூறவில்லை.
பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் பிறகு, உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற விடயங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது மலையக மக்களே. எனவே, இதனை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து புதிய திட்டங்களை எதுவும் அவர் முன்வைத்திருக்கலாம் என இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.