தமிழகத்தில் மனைவி மற்றும் மாமியாரை மாற்றுத்திறனாளி கணவர் கண்மூடித்தனமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் சலங்குக்கார தெருவைச் சேர்ந்த தம்பதி ரவி-பூங்கொடி. இவர்களுக்கு மீனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், மீனாவுக்கும், சோனங்குப்பத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழில் செய்துவரும் நம்புராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று மற்றும் ஒரு வயதில் குழந்தைகள் உள்ளனர். நம்புராஜால் வாய் பேசமுடியாது, காது கேட்காது.
மாற்றுத்திறனாளியான இவர், தன் மனைவி வேறொரு நபருடன் பழக்கத்தில் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.இதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒரு ஆண்டாக மீனா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அப்போது நம்புராஜ் அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மீனாவை அனுப்பி வைக்கும் படி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் மறுத்துள்ளார்.இருப்பினும், குழந்தைகளைப் பார்ப்பதற்காக நம்புராஜ் அங்கு சென்று வந்துள்ளார். அப்படி மாமியார் வீட்டிற்கு சென்று வரும் போதெல்லாம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில், தான் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், தனது தாய் மற்றும் உடல் நிலை சரியில்லாத இரண்டாவது மகளுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்போது அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கண்ட நம்புராஜ், மாமியாருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவ, திடீரென்று நம்புராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியாரான பூங்கொடியை சரமாரியாக குத்தினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனா, அதை தடுக்க முயற்சித்த போது, அவரையும் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தவே, மீனா மற்றும் மாமியார் குழந்தையோடு தப்பி ஓட முயற்சித்தார்.ஆனாலும், நம்புராஜ் விடாமல் இருவரையும் விரட்டி சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இருவரும் நிலை தடுமாற, அங்கிருந்து அவர் தப்பியுள்ளார்.
அவர் தப்பி ஓடிய சிறிது நேரத்தில் இருவருமே சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தலைமறைவாக இருக்கும் நம்புராஜை தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பத்தின் சிசிடிவி காட்சி அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியதால், இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.