நமக்கு மனதில் உறுதி இல்லை என்றால், எளிதில் மனம் சபலம் அடைந்துவிடும். எண்ணங்களுக்கு வலிமை இருக்கிறது. ஒரு விஷயம் தவறு என்று நமது மூளை சொல்லிவிட்டால் எண்ணம் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். அதே விஷயம் சரியா தவறா என்று மூளைக்கே தெரியாவிட்டால், நம் எண்ணங்கள் அதன் சாதக பாதகங்களை மூளைக்கு உணர்த்தும். எண்ணங்கள் வலிமையானவை என்பதனால் ஒவ்வொருவரும் நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
எதிர்மறை எண்ணங்கள் நம் முன்னேற்றத்தை முடக்கிப்போட்டு விடும். இதுவரையில் எனது எண்ணத்தின் வலிமையால் நான் பல இடர்களைக் கடந்து வந்துவிட்டேன். உதாரணமாக் கொரோனாவை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் கவனமாக இருக்கவேண்டிய அதே வேளையில், கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கையை பார்ப்பதைவிட, அதில் குணமாகி வீட்டுக்குச்செல்பவரின் எண்ணிக்கையையே கவனிப்பேன். ஏனென்றால் எதுவும் சாத்தியமே. எந்த சூழலிலும் மனம் என்பது, நாம் சொல்வதை கேட்கும் படி இருக்க வேண்டும், மனம் சொல்வதை நாம் கேட்கும்படி இருக்கக் கூடாது.
பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுவிதமான ஆசைகளால் உலகம் கெட்டுப் போகிறது என்கிறது தர்ம சாஸ்திரங்கள். எதிர்பாலின பெண்ணாசை அல்லது ஆண் மீது வரும் ஆணாசை தவறு இல்லை. ஆனால், பெண்ணாசை என்ற பெயரில் உடல்,பொருள், ஆவி என்று அனைத்தையும் இழக்கும் கா ம இச்சை என்னும் பெண் ஆசை தவறுதான். எதிர்பாலினத்தின் புற அழகை ரசிக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு அழகை ஆராய வேண்டும் என்று நினைதால், அதனால் நஷ்டம் நமக்கு தான்.
எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் சபலம் வரத்தான் செய்யும்.திறந்த வாயை மூடாமல் பார்க்க வைக்க சில தேவதைகள் வந்து போவார்கள். உதட்டோரம் வடியும் ஜொள்ளு கீழே விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு மேல் பிரகாசமாக தெரிய ஆரம்பித்து, சபலம் லேசாக தலை எடுக்கும்போதெல்லாம், கொஞ்சம் குடும்பத்தை நினைத்து பாருங்கள். அடுத்த நொடியே அந்த மாதிரியான எண்ணங்கள் பறந்தோடி விடும். சபலம் என்ற புதை குழியில் சிக்கி வாழ்வை தொலைத்துவிட வேண்டாம்.