முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஒருவழி பயணத்திற்கு மாத்திரம் எட்டு இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த மே மாதம் 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை விலகல் செய்து விட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் மே 18ம் திகதி அவர் நாடாளுமன்ற அமர்வின் போது சமூகமளித்திருந்தார். விமானப்படை விமானங்கள் மூலம் அவர் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாக அப்போது தகவல்கள் பரவியிருந்தன.
மேலும் இது குறித்த ஊடகம் ஒன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விமானப்படையிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், கடந்த மே 18ம் திகதி மகிந்த ராஜபக்ச விமானப்படையின் வை-13 சிறிய ரக விமானம் மூலம் சீனக்குடாவில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்காக 875 லீட்டர் எரிபொருள் செலவிடப்பட்டுள்ளதுடன், ஒருவழிப் பயணத்துக்கான மொத்த செலவு மட்டும் எட்டு லட்சம் ரூபா என்றும் தெரியவந்துள்ளது. அதனை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் செலுத்தி விட்டதாகவும் விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் ரொஹான் வெலிவிவட்டவிடம் அது குறித்து வினவிய போது, தான் அந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றவில்லை என்றும், மகிந்தவின் இளைய மகன் ரோகித ராஜபக்ச பதில் செயலாளராக பணியாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் மகிந்தவின் விமானப் பயணத்துக்கான செலவுத் தொகை அரசாங்க நிறுவனமொன்றினால் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.