உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து நடந்து வருவதை கண்ட கிராமவாசிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கையில் மகளின் தலையுடன் நடந்து வரும் சர்வேஷ் குமாரை கண்ட சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். சாலையில் அமைதியாக நடந்து சென்ற சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.
அவரிடம் சென்ற போலீசார், பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், யாரது தலையை கையில் வைத்திருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சற்றும் தடுமாற்றம் இல்லாமல் பதில் அளித்தார் சர்வேஷ் குமார்.
தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவரின் தலையை வெட்டி எடுத்துவிட்டதாக சர்வேஷ் குமார் ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர், “நான் தான் செய்தேன். யாருமே அப்போது அங்கு இல்லை. அறையில் உடல் கிடக்கிறது” என்று கூறுகிறார்.
பின்னர் சர்வேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவாணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.