அம்பாறை, திருக்கோவில் – கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2009ஆம் ஆண்டு முதல் “உதவும் இதயங்கள்” நிறுவனம் – யேர்மனி பல்வேறு சமூகநலப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
வாழ்வாதார உதவிகள், மருத்துவ உதவிகள், கல்வித் தொடர்ச்சிக்கான உதவிகள், கிராமிய மகளிர் சேமிப்புக் குழுக்களை உருவாக்குதல், இலவச மாலைநேரக் கல்வி நிலையங்கள், அறநெறி வகுப்புகள், ஆரம்பக் கல்வி நிலையங்கள், மலசலகூட வசதிகள், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், வீட்டுத் தோட்டங்களை அமைத்தல், பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் எமது நிறுவனத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது SailyGroup நிறுவனமும் எம்முடன் இணைந்து, போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் பழைய வீடுகளைப் புனரமைத்து வழங்குதல் போன்ற மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக, அம்பாறை மாவட்டம், திருக்கோவில், வினாயகபுரம் 2, பாடசாலை வீதியில், SailyGroup வழங்கிய நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வீடு பயனாளிக் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளம் தொழிலதிபர் திரு. கு. வர்ணன் அவர்களின் தலைமையில், திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களால் குறித்த வீடு பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. கிருஷ்ணா அவர்களும் SailyGroup உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
யேர்மனியில் கல்வி கற்று, இளம் தொழில் முனைவோர்களாக உருவெடுத்து, தமது தாயக உறவுகளின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்குடன் சமூகப் பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள SailyGroup இளம் தொழில் முனைவோர்களை “உதவும் இதயங்கள்” நிறுவனம் – யேர்மனி சார்பில் மனமாரப் பாராட்டி, வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
“உதவும் இதயங்கள் – யேர்மனி”
மனிதநேயப் பணியில் என்றும் உங்கள் கரம் கோர்த்து…

