இன்னமும் பல நாடுகளில் ஆணவக்கொலை என்னும் கொடூரம் அமைதியாக அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது.
காதலித்ததற்காக மகளைக் கொன்ற தந்தை, தங்கையைக் கொன்ற அண்ணன், தன் முறைப்பெண் வேறொருவரைக் காதலித்ததால் அவரைக் கொன்ற முறைமாப்பிள்ளை என பல உறவினர்களே அரங்கேற்றிய ஆணவக்கொலைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.
தற்போது எகிப்தில் ஒரு வித்தியாசமான ஆணவக்கொலை நடந்துள்ளது. இங்கே பெண் மருத்துவர் ஒருவரைக் கொலை செய்தவர்கள், அவரது உறவினர்களே அல்ல! பெயர் வெளியிடப்படாத 34 வயதான பெண் மருத்துவர் ஒருவர், தன் சக ஆண் ஊழியரை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அவர்கள் இருவரும் வீட்டுக்குள்ளிருக்கும்போது, அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த அந்த வீட்டின் சொந்தக்காரர், காவலாளி மற்றும் பக்கத்துவீட்டுக்காரர் ஆகியோர் அந்த பெண்ணை அடித்து உதைத்து ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்கள்.
கீழே விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.எகிப்தைப் பொருத்தவரை, உறவினர் அல்லாத ஒருவருடன் தனிமையில் இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயமாக கருதப்படும், நேரடியாக சட்டம் அதை தடை செய்யாத நிலையிலும், அந்நாட்டு மக்கள் அதை சகிக்க இயலாத குற்றமாக கருதுகிறார்கள்.
சமீபத்தில், திருமணம் முதல் விவாகரத்து வரை ஆண்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர எகிப்து அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்த பெண் மருத்துவரைக் கொன்ற மூன்று பேர் மீதும் இன்னும் குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை.
அவர் மன நல பிரச்சினைகளால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் அவரை கொலை செய்தவர்கள்.அவர்களை தண்டிக்கவேண்டும் என எகிப்தில் பெண் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.