கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கோணிகொப்பல் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி மல்லிகா. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு 4 வயதில் மகன் மற்றும் 2 வயதில் மகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் குழந்தைகளுடன் மைசூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று விதானா சவுதா பகுதியில் உள்ள சிட்டி பூங்காவிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட குழந்தைகள் இருவரும் அழத்தொடங்கினர்.
குழந்தைகளின் அழுகையைக் கேட்டு பார்க்கில் இருந்தவர்கள் கூடினர். பெரும்பாலும் அங்கே ஆண்களே இருந்ததால் பிரசவ வலியால் துடித்த மல்லிகாவை கண்டது, ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் பதில் குரல் கொடுக்கவில்லை.
அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரியும் ஷோபா பிரகாஷ் என்பவர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டத்தை நிற்பதை பார்த்து வந்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தெரிந்த மும்பை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுள்ளார்.
அந்த மருத்துவர் அங்கு பெண்கள் யாரும் இருக்கிறார்களா என்று கேட்க, அந்த இளைஞர் ஷோபா சக்தியிடம் மொபைலைக் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய மருத்துவர், தான் வழிகாட்டுவதாகவும், தைரியமாக வலியால் துடிக்கும் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் படியும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
அதன்படி மருத்துவர் ஆலோசனை வழங்க, பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் தாயும், சேயும் உயிர் பிழைத்ததோடு, அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு தற்செயலாக வந்த பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய உடற்பயிற்சி ஆசிரியை ஷோபா பிரகாஷை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.