தமிழ்நாட்டின் புதுச்சேரியில் உப்பனாறு வாய்க்கால் அருகே கட்டப்பட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராக இருந்த வீடு இன்று இடிந்து விழுந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு மாற்று வீடு வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு இன்று பகல் திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியது.
புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே, குறித்த வீடு இடிந்து வீழ்ந்துள்ளது.
புதுவையில் மேட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் உப்பனாறு வாய்க்கால் வழியாக வெளியேறும்.
ஆனால், இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.
இதற்கு மேல் பாலம் அமைத்து காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்காததால் இந்த பணி இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக பக்க வாய்க்காலில் ஜேசிபி மூலம் மணல் அள்ளும் பணி நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வாய்க்கால் ஓரம் இருந்த வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, திடீரென அப்பகுதியில் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி கட்டடம் பாதியாக சரிந்து கால்வாயில் விழுந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்த வீடு இடிந்து வீழ்ந்ததில் யாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடிந்து வீழ்ந்த வீட்டின் உரிமையாளர்களை புதுவை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது, அவர்களுக்கு மாற்று வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.