இந்தியாவில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை சாமியார் ஒர்வர் தலையை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியா – ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42). மந்திரவாதியான இவர் பில்லி சூனியம் நீக்குவதாக கூறி வந்தார்.
அதோடு திடீர் அதிர்ஷ்டம் வேலை வாய்ப்பு திருமணத்தடை சொத்து கைவசப்படுத்துவது, வசியம் செய்வது, மந்திர பூஜையால் எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானார். இது குறித்து அவருடைய மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததை அடுத்து சாமியாரிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது பல பகீர் தகவல்கள் வெளிவந்து பொலிஸாரை பீதியில் ஆழ்த்தியது.
பொலிஸ் விசாரணையில் , சாமியார் ரியல் எஸ்டேட் அதிபரை தலை துண்டித்து கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொத்து அபகரித்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாமியார் சத்தியம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
விசாரணையில் பகீர் தகவல்கள்
சாமியார் சத்தியம் தன்னிடம் பில்லி, சூனியம் நீக்குவதற்காக பூஜை செய்ய வருபவர்களின் பின்னணியை அறிந்து கொண்டுள்ளார். அவர்களை தனியாக வரவழைத்து அதிக பணம் நகை வாங்கிய பின்னர் அவர்களை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.
ஐதராபாத்தில் வாலிபர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். வாலிபர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை என சாமியாரை தட்டி கேட்டார்.
அப்போது வாலிபரை சாமியார் கொலை செய்துள்ளார். அதேவேளை சாமியார் இதுவரை 21 பேரை கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் சொத்து உள்ளிட்டவற்றை சாமியார் அபகரித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா அல்லது உடல்களை எரித்து விட்டாரா என்பது தெரியவில்லை.
21 பேர் தவிர மேலும் யாரையாவது சாமியார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.