அரியலூர் அருகே இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல பணியாளர்கள் வந்தனர். பணி முடித்து விட்டு திரும்பிய அப்பகுதி பணியாளர்கள், அங்கு இருக்கும் சுரங்கப்பகுதியில் யாரோ மண்ணை தோண்டி மூடியுள்ளதைப் பார்த்து சந்தேகப்பட்டனர்.
உடனடியாக பணியாளர்கள் மண்ணைத் தோண்டிப் பார்த்தனர். மண்ணைத் தோண்டிப் பார்த்ததில் இரட்டைக் குழந்தைகளின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரட்டைக் குழந்தையின் சடலத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குழந்தைகளை அங்குப் புதைத்துச் சென்றது யார்? என விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளைக் கொலை செய்து இருக்கலாம் என்றும், குழந்தையின் பெற்றோர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் இருவேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.