பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழா இன்றைய தினம்(06.05.2023) மிக பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.
இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண்மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் இந்த பிரம்மாண்ட விழாவை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், இந்த விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க வண்டி மீண்டும் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி இந்த வண்டி மீண்டும் நாளை பயன்படுத்தப்பட உள்ளது.
பாரம்பரியம் கொண்ட இந்த சாரட் வண்டியில் தான் மன்னர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் பக்கிம்காம் அரண்மனை தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த காட்சியினை இலட்சக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டுரசிக்க உள்ளனர்.
விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டு பழமையான தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி உள்ளது.
விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோலை ஏந்தி கையில் தடியுடன் மன்னர் சார்லஸ் இந்த சிம்மாசனத்தில் அமருவார். அதன் பிறகு புனித எட்வர்டின் கிரீடம் அவரது தலையில் சூடப்படும். அதனை அடுத்து மன்னரின் மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.
இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். உலக தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள், இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.
விழா நடைபெறும் பக்கிம்காம் அரண்மனை முழுவதும் வாடாத மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. மேலும் விழாவையொட்டி எதிர்வரும் 08.05.2023ஆம் திகதி திங்கட்கிழமை இங்கிலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணைக்கவரும் வகையில் நடைபெற உள்ள இந்த முடி சூட்டுவிழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.