பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையின் மற்றொரு கட்டமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17) ஆரம்பமானது.
அதன்படி, இன்று (18) இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.