பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் பால் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை, இந்தியாவின் தேசிய பால் மேம்பாட்டு சபை (NDDB) மற்றும் ( Amul) அமுல் பால் நிறுவனம் ஆகியன இணைந்து வழங்கவுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் தங்கியிருப்பதற்குப் பதிலாக உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அண்மையில் நியமித்தார்.
அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேசிய பால் மேம்பாட்டு சபையின் (NDDB) பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். இவ்வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான முதல் செயலாளர் கலாநிதி ராகேஷ் பாண்டே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.