மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான எமது பங்களிப்பை ஏனைய நேர்மையாக செயற்படுகின்ற தமிழ் கட்சிகளுடனும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தையும் நாங்கள் இந்தத் தருணத்திலே தெரிவித்துக்கொள்கின்றோம் என ஈரோஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தேசிய மாநாட்டை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா.சிறிராஜ ராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் போன்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
தேசியவாதம் பேசுவோருக்கு எமது கட்சி சிறந்த பதில் வழங்கியுள்ளது எனவும் பிரதேச ரீதியாக பிளவுபட்டிருக்கும் சமூகங்களை ஒருங்கிணைப்பதற்கு எமது ஈரோஸ் அமைப்பு முன்னின்று உழைக்கும் எனவும் இதன்போது பொதுச் செயலாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அமைப்பினுடைய பொதுச் செயலாளர் எனும் உயர் பதவி வடக்கு கிழக்கு மாகாண தோழர்களின் ஏகமனதான ஆதரவுடன் மலையகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பது ஈரோஸ் அமைப்பிற்கு மேலும் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சிறந்த தருணமாகும். எமது தோழர் ரெட்ணசபாபதியின் எண்ணக்கரு இன்று நிறைவேறியிருக்கின்றது.
பிரதேச ரீதியாக சமூகம் ரீதியாக பிளவுபட்டிருக்கும் சமூகங்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சக்தியாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது வகிபாகத்தை சரியாக செய்வதற்கு முற்படும் என்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து, துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடி இந்த மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான எமது பங்களிப்பை ஏனைய நேர்மையாக செயற்படுகின்ற தமிழ் கட்சிகளுடனும் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தையும் நாங்கள் இந்தத் தருணத்திலே தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு மிகவும் ஒடுக்கு முறைக்கும் பாகுபாட்டிற்கும் மலையக மக்கள் முகம் கொடுத்துவருகின்றார்கள். அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை இந்த நாட்டில் இருநூறு வருடத்தை நிறைவு செய்திருக்கின்ற அந்த சமூகத்திற்கு இன்றைவரைக்கும் காணி உரிமை இல்லை, அவர்களுக்கான முறையான வாழ்விடம் இல்லை, சுயதொழில் செய்வதற்கான இடம் இல்லை இப்படியான பல்வேறு வகையான பிரச்சினைகளை மலையக பாட்டாளி வர்க்கமும் மலையக மக்களும் எதிர் நோக்கி கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே எதிர்காலத்தில் மலையகத்திலே அந்த மக்களின் பிரச்சினைகளில் நேர்மையாக செயற்படுகின்ற அமைப்புகளோடு இணைந்து கொண்டு அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என்பதை தெரிந்து கொள்கின்றேன் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
கோவிட் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக மாவட்டங்களிலிருந்து குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த தேசிய மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அருண் தம்பிடுத்து மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.