முருங்கை இலையின் நன்மைகள், எவ்வாறு இதில் சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
‘முருங்கை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்’ என்பது நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழமொழி.
இதன் அர்த்தம் என்னவெனில் முருங்கையின், கீரை, பூ, காய், என அனைத்தும் மருத்துவ மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், வயதான பின்பும் கம்பு இல்லாமல் வெறும் கையுடன் ஆரோக்கியமாக நடப்பார்கள் என்பதே அர்த்தம்.
முருங்கையில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி போன்றவை உள்ளன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். எலும்புகளை பலப்படுத்தும். கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
உடல் எடையைக் குறைப்பவர்கள், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என முருங்கை மூலமாக ஏராளமான பலன்கள் கிடைக்கின்றது.
முருங்கை கீரை பிரட்டல், கீரை சூப், முருங்கை பூ சேர்த்த பால், முருங்கை இளம்பிஞ்சு சேர்த்த பருப்பு, நெய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என்று உணவுகளில் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முருங்கை பிசினும் பயன்படுத்தப்படுகிறது.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், முருங்கை கீரையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் உடம்பிற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொடுக்கின்றது.
மேலும் முருங்கை சாப்பிட்டால் இன்சுலின் அளவுகள் அதிகரிக்கும். அதனால் ரத்த சர்க்கரை குறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
முருங்கையில் கிடைக்கும் நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும், நமக்கான கலோரி தேவையை குறைப்பதுடன், மலச்சிக்கல் வராமல் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.
உணவை ஆற்றலாக மாற்றும் பொருட்டு நம் செல்களில் நடைபெறக் கூடிய வினைதான் மெட்டபாலிசம் ஆகும். எந்த அளவுக்கு மெட்டபாலிசம் கூடுதலாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உடம்பில் ஆற்றல் கிடைக்கும்.
பொதுவாக மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 முருங்கை கீரையில் கிடைக்கின்றது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 5
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்கு காம்புகள் நீக்கி உருவி எடுத்து, சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாய் ஒன்றில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது சூடானதும், அதில் முருங்கை இலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளராக வற்றிய பின்பு அடுப்பை அனைத்துவிட்டு சூப்பை பறிமாறலாம். காரம் தேவையெனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்தக் கொள்ளவும்.