சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து நீதித்துறை அதிகாரிகள், உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர்களுக்கு சில விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான காலதாமதங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தனிப்பட்ட ரீதியில் விசாரணை செய்து, தாமதங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது போன்ற காலதாமதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்கும் செயல்முறையை நீதிமன்றப் பதிவாளர் மூலம் நேரில் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த நாளிலிருந்து அதிகபட்சமாக 05 வேலை நாட்களுக்குள் சான்றளிக்கப்பட்ட நகல் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.