நிலம் என்பது தவிர்க்க முடியாத மூலதனமாக மாறிவிட்டது. ரியல் எஸ்டேட் பெருகிவிட்ட காலகட்டத்தில் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது.சொந்த ஊரிலே நிலம் வாங்க வேண்டும் எனப் பலரும் வாழ்நாள் முழுக்க உழைத்து வரும் நிலையில் இந்தியர் ஒருவர் நிலாவின் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார், அதுவும் பரிசாக..!
அவரின் பெயர் ரஹ்மானி, நொய்டாவில் உள்ள ஏ.ஆர் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் இயங்கி வரும் லுனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்கிற நிறுவனத்திற்கு சாப்ட்வேர் உருவாக்கி கொடுத்துள்ளார்.
இந்த நிறுவனம் நிலாவில் உள்ள நிலங்களை விற்பனை செய்து வருகிறது. ரஹ்மானியின் பணியை பார்த்து பிடித்துப்போன நிறுவனம் அவரைப் பாராட்டும் விதமாக நிலாவின் ஒரு ஏக்கர் நிலத்தை பரிசாக அளித்துள்ளது.
நிலாவில் இடம் வாங்குவது என்பது சமீப காலங்களாக வைரலாகி வருகிறது. இதனை வைத்து பெரிதாக எதுவும் செய்ய முடியாது. நிலாவில் நிலம் சொந்தமாக உள்ளது என்கிற சான்று மட்டுமே வழங்கப்படும். பூமியிலே சொந்த நிலம் வாங்க மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் நிலாவில் சொந்த நிலம் வாங்குவது மக்களுக்கு மகிழ்வாகவே இருக்கும்.