நான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
இதன்போது, உரையாற்றிய பிரதமர் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வரிசையில் நிற்கும் முறையையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் வரிசைகளை இல்லாது செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் அளவை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும், தான் இருக்கிறேன் என்பதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியது ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த, தான் பதவி விலக போவதில்லை என்றும் அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.