நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலி தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மோசடியான முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பிலுள்ள முன்னணி வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய குறித்த குழுவினர் முயற்சிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களைப் போன்று போலி குரல் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த போலி குரல் பதிவுகளை நம்பி, மீள தொடர்புகளை ஏற்படுத்திய வர்த்தகர்கள் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, இரண்டு முன்னணி திறன்பேசி விற்பனை நிலையங்களில் இருந்து 47 இலட்சம் மற்றும் 29 இலட்சம் ரூபா பெறுமதியான திறன்பேசிகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி போலி காசோலைகளை வழங்கியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆகவே, இவ்வாறு போலியான மோசடிகளின் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.