நாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ëஇந்த வாரம் பைடன் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பிற்கான கால அட்டவணை இருக்கும். ஈராக்கின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும், அமெரிக்க தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் இல்லாமல் நாட்டைக் காக்கும் திறன் கொண்டவை.
ஈராக் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும்.
அத்துடன், இராணுவ உளவுத் தகவல்களையும் அமெரிக்காவிடமிருந்து ஈராக் தொடர்ந்து கேட்டுப் பெறும்.
ஈராக்கில் அமெரிக்கா துருப்புகள் இருப்பதிலிருந்து நாங்கள் விரும்புவது என்னவென்றால், எங்கள் படைகளுக்கு அவர்களின் செயற்திறன் மற்றும் திறன்களை பயிற்றுவிப்பதிலும் மேம்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் ஆதரவளிப்பதாகும்í என கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ எதிர்த்துப் போராடுவதற்கும் திரும்பப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்கும், ஈராக்கிய துருப்புக்களுக்கு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஏப்ரல் மாதத்தில் ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கால அட்டவணை எதுவும் அமைக்கப்படவில்லை.
காலக்கெடு இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான அமெரிக்க துருப்புக்களை ஈராக்கிலிருந்து வெளியேற்றக்கூடும்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துருப்புக்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டதற்கு பிறகு, அங்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை சுமார் 2,500ஆக இருந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தோற்கடித்ததாக ஈராக் அறிவித்தது. ஆனால் அந்தக் குழு இன்னும் நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ளது மற்றும் பாக்தாத்தில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகிறது.
கடந்த வாரம் நாட்டின் தலைநகரில் ஒரு சந்தையில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.