ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார்.
துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஏராளமான தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஸ்விக்கி செயலி வழியாக உணவகத்தில் ஆர்டர் செய்தார் நிவேதா பெத்துராஜ். ஆனால் பார்சலில் வந்த உணவை அவர் திறந்து பார்த்தபோது உணவுக்குள் கரப்பான்பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபோல இருமுறை நடந்துள்ளது என புகார் தெரிவித்து இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவு எழுதினார்.ஆதாரத்துக்காகப் புகைப்படத்தையும் இணைத்தார். இதையடுத்து நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்த உணவகத்தில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி பலரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துகொண்டார்கள். இதனால் அந்த உணவகத்தை ஸ்விக்கி செயலியில் இருந்து நீக்கும்படி நிவேதா பெத்துராஜ் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த உணவகத்தைத் தனது செயலியில் இருந்து ஸ்விக்கி நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் அந்த உணவகத்தில் விற்கப்படும் உணவுகள் குறித்து இருமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்த பெருங்குடியில் உள்ள உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அங்கிருந்து அகற்றினார்கள். இதையடுத்து அந்த உணவகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கும்வரை மூன்று நாள்களுக்கு உணவகம் செயல்படவும் இடைக்காலத் தடை விதித்துள்ளார்கள்.