தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு, நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “என் நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.
பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாய் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ நல்ல விஷயம் பண்ணுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். நானும் அவனுக்கு ரசிகன் தான். என்னால் அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கண்ணீர்மல்க பேசியிருக்கிறார் வடிவேலு.