தேர்தல் ஆணைக்குழுவில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக ஏராளமான புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு சுமார் 70 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ள போதிலும, 30 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
போதுமான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை காரணமாகவே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருட காலத்தினுள் செயற்பாட்டு ரீதியான அரசியல் பங்களிப்புகள், தேசிய மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை வௌியிடுதல் மற்றும் அவற்றை சமூகமயப்படுத்தல், கடந்த கால தேர்தல்களில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு என்பன புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவுக்கு தேவையான தகைமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேற்குறித்த தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தொடர்பான நேர்முகதேர்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.