துரியன் பழம் பலா பழம் போன்ற தோற்றத்துடன் அளவில் சிறியதாக உள்ள பழம். பொதுவாக இதன் விலையானது மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு வித வெறுக்கத் தக்க மணத்துடன் இனிமையான சதைப்பகுதியை இப்பழம் பெற்றுள்ளது.
இதனால் துரியன் பழத்தின் மணம் நரகத்தைப் போன்றும், சுவை சொர்க்கத்தைப் போன்றும் இருக்கும் என்ற பழமொழியை இப்பழம் பெற்றுள்ளது.
மால்வேசி குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஜீன் முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே கிடைக்கும்.
துரியனின் மருத்துவ பண்புகள் :
பழுக்காத துரியன் காய்கள், பல குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்க பயன்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடலாம்.
துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம் மற்றும் இதில் வாழைப்பழத்தை விட 10 மடங்கு இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.நாள்பட்ட குடல் நோய்கள் மற்றும் மூலம் போன்றவற்றிற்கு இப்பழம் சரியான தீர்வாகும். இப்பழத்தினை உண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு பெறலாம்.
100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.நமது தினசரி விட்டமின் பி1 தேவையில் 33 சதவீதத்தையும், பி6 மற்றும் சி தேவையில் 24 சதவீதத்தையும் இப்பழம் பூர்த்தி செய்கிறது.
இப்பழத்தில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பேண்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), போலேட்டுகள் போன்றவைகளும், தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகளும், ஆல்பா, பீட்டா கரோடீனாய்டுகளும், கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், கொழுப்புகளும், நார்சத்தும், நீர்சத்தும் காணப்படுகின்றன.
இப்பழம் நார்சத்து மிக்கது. இதனால் இப்பழத்தினை உண்ணும்போது உணவானது நன்கு செரிமானம் ஆகிறது. இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் பி1(தயாமின்) மற்றும் பி3(நியாசின்) பசியின்மை சரிசெய்து செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது.உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உடலானது உட்கிரகித்து வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெற இப்பழம் உதவுகிறது.
இப்பழமானது அதிக அளவு பொட்டாசியத்தையும், குறைந்த அளவு சோடியத்தையும் கொண்டுள்ளது. இதனாலேயே துரியனானது இரத்த அழுத்தத்திற்கு ஏற்ற பழமாகக் கருதப்படுகிறது.குறைந்த அளவு சோடியத்தைக் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இப்பழம் ஏற்றது.
முதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் இன்றைய சூழலில் இளம் வயதில் முடி நரைப்பது, சரும சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இக்குறைபாடுகளை ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ள துரியன் சரியான தேர்வாகும். இப்பழத்தில் காணப்படும் நீர்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் சருமம் மற்றும் கேசம் விரைவில் முதுமை அடைவதை சரிசெய்கிறது.
இப்பழத்தில் இயற்கை தூக்கத்திற்கு காரணமான டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் காணப்படுகிறது. மனப்பதட்டத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களான செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவற்றின் வளர்சிதைக்கு டிரிப்டோபன் தேவைப்படுகிறது.மனஅழுத்தம், பசியின்மை, பதட்டம் போன்றவற்றை குறைக்கும் பொருளாக டிரிப்டோன் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே துரியனை உண்டு தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு தீர்வினைப் பெறலாம்.
கருவுறுதலுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அவசியமானது. துரியனில் இந்த ஹார்மோன் அதிகஅளவு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழம் கருவுறுதலுக்கு இயற்கை மருந்தாகக் கருதப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் தாயின் அதிக உடல் எடை மற்றும் போதுமான எடையின்மை காரணமாக ஏற்படும் கருசிதைவினை இப்பழம் தடைசெய்கிறது. ஆண் பெண் பாலின ஹார்மோன் குறைபாடை சரிசெய்து குழந்தைப் பேற்றினை இப்பழம் வழங்குகிறது.
இப்பழத்தில் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி காம்பிளக்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போது வெளியாகும் ப்ரீரேடிக்கல்களை சரி செய்து செல்களின் உள்ள டிஎன்ஏ-வைப் பாதுகாத்து புற்றுசெல்கள் உருவாவதைத் தடை செய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோய் வராமல் பாதுகாக்கலாம்.
இப்பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியமும், கால்சியமும் காணப்படுகின்றன. இப்பழத்தில் நம் அன்றாட பொட்டாசிய தேவையில் இப்பழம் 9 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. மேலும் பொட்டாசியமானது உடல் கால்சியத்தை உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
கால்சியம் உடலில் கரைந்து விடாமலும், உடலைவிட்டு வெளியேறி விடாமலும் எலும்புகளில் சேமிக்க பொட்டாசியம் காரணமாகிறது. எனவே இப்பழத்தினை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. இப்பழத்தில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இந்த அமிலமே ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்பழத்தில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தால் இப்பழத்தினை உண்ணும்போது இரத்தம் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதோடு உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கி உடலினை நன்கு இயங்கச் செய்கிறது.
இப்பழத்தில் மற்ற பழங்களைவிட அதிக அளவு கொழுப்பு உள்ளது. இப்பழத்தினை அதிகம் உண்ணும்போது கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கும், கொலஸ்ட்ராலின் அளவினை குறைக்க விரும்புபவர்களும் இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.