துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 1,444 பேரும், துருக்கியில் 2,300 பேரும் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர்.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறியுள்ளார். 1939 ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.