நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்று சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, திலினி பிரியமாலி சிறைச்சாலையில் சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 24ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிமன்றில் இடம்பெற்றது.
மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.