யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் நேற்றைய தினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை அமைப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவது குறிப்பட்டத்தக்க ஒரு விடயம்.
இந்த நிலையில், போயா தினமான நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த புத்தர் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இப்படி, புத்தர் சிலைகளை கொண்டுவந்து வைப்பதுவும் எடுத்துச் செல்வதுமாக செய்து, பின்னர் ஒரேயடியாக சிலையை வைத்துவிட்டு விகாரை அமைக்கக்கூடிய சூழல் இருப்பதாக பல தரப்பினரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து வழிபட பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.