விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தாசில்தார் ஓட்டிவந்த வாகனம் மோதி, சாலையோரம் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குணசேகரன்.
இவரது மகள் மணிமேகலை, 10ஆம் வகுப்பு மாணவியான அவர் தனது வயலுக்கு செல்ல பால்பட்டு பகுதியில் செஞ்சி சாலை ஓரம் நின்று கொண்டுருந்தார்.
அப்போது விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கி வந்த செஞ்சி வட்டாட்சியர் வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணைவி பலத்த காயம் அடைந்தார்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வாகனத்தை இயக்கிய செஞ்சி தாசில்தார் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனால் அவர் மீது இதுவரை துறைரீதியாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பிய உறவினர்கள் செஞ்சி விழுப்புரம் சாலை பலப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாகனத்தை இயக்கி வந்த தாசில்தாரிடம் நான்கு சக்கர வாகனம் இயக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கி சாலை ஓரமாக நின்று இருந்த சிறுமியின் மீது மோதியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய தாசில்தார் ராஜன் மீது கொலை வழக்குப்பதிந்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரனம் கிடைக்க அரசு உத்தரவிட வேண்டும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10ஆம் வகுப்பு மாணவியை பறிகொடுத்த குடும்பத்தினர் பரிதவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விபத்தை ஏற்படுத்திய தாசில்தாரோ சொகுசாக தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.