தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க, ஆட்சியாளர்களும் போலவே, மக்களும் குறைந்த விடுமுறை எடுத்து, அதிக அளவில் பணியாற்ற வேண்டும் எனவும், கட்சியின் தலைவராக நடைமுறையில் அதற்கானபங்களிப்பை தாம் வழங்குவதாகவும், அது வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், நிதர்சன ரீதியாக நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த 16 ஆம் திகதி மொரவெவ பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
குட்டித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தாங்கள் நினைப்பது போல் நடந்து கொள்ள வாய்ப்பில்லை எனவும், சம்பிரதாய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போல ஒப்பந்தம் செய்யவோ அல்லது பிற இலாபகரமான விடயங்களைச் செய்யவோ வாய்ப்பில்லை எனவும், மக்களுக்கு சேவையாற்றும் ஸ்மார்ட் உள்ளூராட்சி சபையே தேவை எனவும் எதிர்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் இளைஞர் ஆலோசனைக் குழு மூலம் கண்காணிக்கப்படும் எனவும், மக்களுக்கு சேவையாற்றாவிடின் அவர்களை உடனடியாக நீக்குவதற்கு இருமுறை சிந்திக்க மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள், பாடசாலை மாணவர்களின் அறிவை விருத்தி செய்ய, ஒவ்வொரு கிராமத்திலும் நூலகம் உருவாக்கப்பட்டு தகவல் மற்றும் தரவுகளை அணுக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும், இந்த அனைத்து வேலைத்திட்டங்களின் நோக்கமும் இலங்கையை உலகில் முதல் இடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே எனவும், இதற்காக பாராளுமன்றம் தனித்து செயற்பட முடியாது என்பதால் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள பாடுபடுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.