சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய ஒரே ஒரு கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவனான கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் திருக்குமரன் சர்வதேச போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மாணவன் தொடர்பில் குறிப்பிடுகையில், “இந்த மாணவன் சர்வதேச போட்டிக்காக செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ள தமிழ் மாணவன் என்பதில் பாடசாலை சமூகம் மகிழ்வடைகிறது. 2 தடவை சர்வதேச போட்டிக்கு சென்ற இவர், மூன்றாவது தடவையும் செல்கின்றார்.
இது குறித்து அந்த மாணவன் கூறுகையில்,
தனது முயற்சியால் கடந்த முறை சர்வதேச போட்டிக்கு சென்று வெற்றி கிண்ணங்களை பெற்றேன். இம்முறையும் போட்டிக்கு செல்கிறேன். எனக்கு ஊக்கமளித்த பாடசாலை சமூகம், பெற்றோர், உதவிய கிளிநொச்சி மக்களிற்கும் நன்றி கூறுகின்றேன் என மாணவன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் குறித்த போட்டி நடைபெற உள்ள நிலையில் இலங்கையிலிருந்து ஆறு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு தெரிவானவர்களில் ஐந்து சிங்கள மாணவர்கள் அடங்கும் நிலையில் தெய்வேந்திரம் திருக்குமரன் ஒருவர் மாத்திரமே தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.