எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என மாதங்களுக்கு தென்னிலங்கையில் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் பாரிய உதவிகள் அவசியமான சூழலில் இவ்வாறான சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகவும், பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் சுமார் 15 பேர் கொண்ட குழு தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேசிய அரசாங்கத்தின் விசேட அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அதனை தேர்தலின் பின் புதிய கூட்டனியாக வலம் வரும் இருவர் உள்ளடங்கலாக மூவர் இவ் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் முன் ஏற்பாடாகவே வருகின்ற வாரம் செவ்வாய்கிழமை இடம் பெறும் சந்திப்பு இடம் பெறலாம் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடும் அதே வேளை முன்னாள் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மத்தியகுழுவில் எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் எனக் கூறி கடும் விமர்சனத்தை எதிர் கொண்டமை குறிப்பிடத்தக்கது.