17 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது தந்தையை கத்தியால் தாக்கி படுகொலை செய்துள்ளான். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜொந்தாமினர், சம்பவம் குறித்து தெரிவிக்கையில், இச்சம்பவம் Ploeren, (Morbihan) எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளதாகவும், 17 வயதுடைய குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை, ஜூன் 5 ஆம் திகதி இரவு 11.30 மணி அளவில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜொந்தாமினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளான்.
தனது தந்தையை அவன் கொலை செய்துவிட்டதாக அவர்களிடம் தெரிவித்துள்ளான். அதை அடுத்து ஜொந்தாமினர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு 46 வயதுடைய தந்தை சடலமாக கிடக்க, அவரது 17 வயதுடைய மகன் ஜொந்தாமினருக்காக காத்திருந்துள்ளான். அன்றைய இரவு மிக கடுமையாக குடித்திருந்தான் எனவும், தந்தை தம்மை திட்டியதாகவும், பின்னர் அவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு சென்று அவரை குத்தி கொன்றதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். ஜொந்தாமினர் உடனடியாக அவனை கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.