எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி என அழைக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் நோயை கட்டுப்படுத்தும் விசேட குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடையவர்கள் எனவும் ஜனாதியால் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, நாளை (11) முதல், தடுப்பூசி போடப்படும் எந்த இடத்திலும் பூஸ்டர் டோஸ் ஃபைசர் தடுப்பூசியை பெற்றக் கொள்ள முடியும்.
இத்தினங்களில் பதிவாகிவரும் தொற்றாளர்களில் பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்றில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், கொவிட் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொவிட் குழு இன்று தீர்மானித்தது.