தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.
ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
ஆபிரிக்க பிராந்தியத்துடன் இலங்கையும் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றது. இந்த உறவு மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆபிரிக்க கண்டம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் அண்மைய தசாப்தங்களில் அதன் முதலீடு, சுற்றுலா மற்றும் குடிவரவு என்பன வளர்ச்சியடைந்துள்ளன.
நாட்டில் அமைதியை பேணுதல் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி வழங்கி வரும் அர்ப்பணிப்புக்கும் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
பொருளாதார கூட்டுறவு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விஸ்தரித்தல், தென்னாபிரிக்காவின் உதவியைப் பெற்றுக் கொடுத்தல், இனங்களுக்கிடையே நிலையான நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலேயே தாம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அத்தூதுவர்கள் தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “75 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்ற இலங்கை, அக்காலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளின் குரல்களை ஓங்கச் செய்வதற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டது. இதன் விளைவாகவே மேற்படி நான்கு சக்திகள் மற்றும் இந்தோனேஷியா என்பன இணைந்து, கொழும்பு பவர் மாநாடு (Colombo Power Conference )உருவானது. மேலும், இதனை அப்ரோ – ஆசியா (Afro-Asia) மாநாடு என அழைக்கவும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.” என்றும் தெரிவித்தார்.
மேலும் உலக விவகாரங்களில் தமக்கும் குரல் உண்டு என்ற எண்ணத்தை நிலைநாட்டுவதற்கு அணிசேரா இயக்கம் ஆபிரிக்க நாடுகளுக்கு வாய்ப்பளித்தது என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு அளித்தமைக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபிரிக்க நாடுகளைப் பாராட்டினார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 1980 களில், சோவியட் யூனியனின் வீழ்ச்சியுடன் உலகின் ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம் கண்டது. இதற்கிடையில், போரின் விளைவாக இலங்கை மீது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. போருக்குப் பின்னரும், பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டின் மீது கவனம் செலுத்தப்பட்டது. எனினும் தற்போது அந்த கட்டம் முடிவுக்கு வருகிறது.
“அதிகாரமானது தற்போது நேர்மையான வழியில் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் ஆசியாவிற்கும் அப்படியே ஆபிரிக்காவிற்கும் மாற்றமடைவதைக் காணமுடிகிறது.” அந்த அதிகார மாற்றம் தொடர வேண்டும்.
சீனாவுடன் கிழக்கு ஆசியா உருவாகி வருவதை நாம் பார்க்கும்போது, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுடன் தெற்காசியாவும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இதனைப் பின்பற்றும் என தெரிகிறது. எமக்கும் பாரிய குரல் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக இந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியது கட்டாயம்.
இங்கே இரண்டு விடயங்கள் உள்ளன. அதில் ஒன்று நாம் தலையிட மறுக்கும் உக்ரேன் விவகாரம். மற்றையது தாய்வானில் உருவாகி வரும் நிலைமை.
இன்று உலகில் நடப்பவை பக்கச் சார்பானவை. குறிப்பாக ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, அது அதிக வளங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அதேசமயம் தமது குரலையும் வலுப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கையில் இலங்கை ஆபிரிக்காவுக்கு ஆதரவளிக்கிறது. அடுத்தது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றத்துக்காக அதிகம் உறுதியளிக்கப்பட்டாலும் உக்ரேன் யுத்த த்துக்காகவே பல பில்லியன்கள் கொடுக்கப்படுகின்றன.
எனவே ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் செல்லும் போது நாம் நமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும், சமரசம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கு இந்தியப் பெருங்கடலையும் ஆபிரிக்காவையும் நோக்குவதே தற்போது இலங்கையின் கொள்கையாகவுள்ளது. இலங்கை மத்திய கிழக்குடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்றாலும் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சில நாடுகளுடன் விளையாட்டு ரீதியாக இலங்கை ஆபிரிக்காவுடனேயே இணைந்து செயற்பட வேண்டும். குறிப்பாக, இலங்கை ஆபிரிக்க கண்டத்துடன் திறந்த அரசியல் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
பல இலங்கை நிறுவனங்கள் ஆபிரிக்காவில் முதலீடு செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்கின்றோம். ஆபிரிக்காவுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.