ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது.
UPI என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறை ஆகும்.
மேலும் UPI பணப்பரிவர்த்தனை IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறை என்றாலும் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட வாடிக்கையார்கள் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது. அவர்களின் யுபிஐ ஐடி (UPI ID) வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஒரு வருடமாக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI ID நீக்கப்படும். அதேபோல, செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யுபிஐ ஐடி (UPI ID) நீக்கப்படும்.
டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 -ம் தேதிக்குள் யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்டால் அவர்களது UPI ID நீக்கப்படுவதை தவிர்க்கலாம்.