போலியான இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கைப் பெண் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை இந்திய தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும், தமிழ்ப் புலிகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு நிதியுதவிகளை வழங்கியதாகவும் கூறப்படும் மேலும் நால்வர் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல் மற்றும் எல் செல்லமுத்து என்ற ஐந்து பேர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் போலி கடவுச்சீட்டுடன், லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண், 2021 இல் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போலியான ஆவணங்கள் மற்றும் பிற இந்திய அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து பல இந்திய கடவுச்சீட்டுக்களை தயாரித்ததுடன், சந்தேகத்துக்குரியவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டைக் கிளையிலிருந்து பணத்தை எடுப்பதற்கும் அந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அத்துடன் இந்த பணத்தை, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தியதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.