சீமான் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளை உடைத்து கனிம வளங்களை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்துவதை கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யூடியூபர் சாட்டை துரைமுருகன், தலைவர்கள் குறித்தும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, யூடியூபர் சாட்டை துரைமுருகனை பொலிசார் இன்று அதிகாலை நாங்குநேரியில் வைத்து கைது செய்ததுடன், அவரை, 25ம் தேதி வரை நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதற்கு முன்னர்பு, திருச்சி கே.கே.நகரில் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாகப் பேசி சமூக வலைதளங்களில் விமர்சித்ததை, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் யூடியூபர் சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.