சீட்டிழுப்பில் முதல் பரிசு இந்திய மதிப்பில் ஒரு கோடி வென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிருக்கு பயந்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியா- கேரள மாநில அரசின் ஃபிப்டி ஃபிப்டி சீட்டிழுப்பில் குலுக்கல் ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதில் முதல் பரிசுத் தொகையான ஒரு கோடி ரூபாய், திருவனந்தபுரத்தில் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிர்ஷு ராபா (36) என்பவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பரிசு விழுந்த விவரம் தெரிந்தவுடன் அவருடைய நண்பர்கள் உட்பட பலரும் அவரை சந்திக்க சென்றனர்.
இதனால், ‘பணத்திற்காக யாராவது தன்னை கொலை செய்து விடுவார்களோ?’ என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில் பொலிஸ் உதவியை நாட முடிவு செய்தார்.
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் காவல் நிலையத்திற்கு சென்று பொலிஸ் அதிகாரியை சந்தித்து, “எனக்கு சீட்டிழுப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
அதற்கான டிக்கெட் என்னிடம் இருப்பதால், பணத்திற்காக யாராவது என்னை கொலை செய்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அவருக்கு ஆறுதல் கூறிய பொலிஸார் உடனடியாக வங்கி அதிகாரிகளை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து டிக்கெட்டை அவர்களிடம் ஒப்படைக்க வைத்ததுடன், , ‘கிடைக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்’ என்று அறிவுரை கூறி ராபாவை அனுப்பி வைத்தனர்.