ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கும், அதன் எரிபொருளுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் சவுதி அபிவிருத்திக்கான நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) இதனை தெரிவித்துள்ளார்.
சவூதி அபிவிருத்திக்கான நிதியம், பொதுவாக சமூக மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கே உதவி அளித்து வருகிறது. இருப்பினும், விமான நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் எரிபொருள் கட்டணங்கள் காரணமாக, இலங்கை அரசாங்கம் குறித்த நிறுவனத்துடன் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளது.
சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பதிலைப் பொறுத்து குறுகிய கால அல்லது நீண்ட கால வசதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இருக்கலாம். அத்துடன், கடனின் அளவு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் (Sri lankan Airlines) எதிர்கால எரிபொருள் கட்டணங்களை ரூபாவுக்குப் பதிலாக அமெரிக்க டொலரில் செலுத்துமாறு கோரியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.