கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 10 ஆளும் கட்சி உறுப்பினர்கள் தம்மை சுயேச்சை குழுவாக பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தமது முடிவை அறிவிக்க உள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்குப் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்தாமல் மக்கள் நாளுக்கு நாள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அதற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியமையே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்குக் காரணமாகியுள்ளது.
இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்த, சந்திம வீரக்கொடி, நிமல் லான்சா, கெவிந்து குமாரதுங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரேமநாத் சி தொலவத்த மற்றும் பலர் உள்ளனர். இதற்கு மேலதிகமாக பல இராஜாங்க அமைச்சர்களும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விமல், கம்மன்பில, வாசு ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பும் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளதுடன் அந்த அணிக்கு 25க்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன.
கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவில் இருந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அரசாங்கத் தலைவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்து தற்போது அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்காமல் போனதே இவர்களின் முக்கியப் பிரச்சினையாகும். கட்சிக்கு நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் உள்ளன.
இந்த நிலையில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டுமன்றி 133 என்ற தனிப் பெரும்பான்மையும் ஆபத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது