கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள் மீது பணியிடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என பிரான்ஸ் நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, மருத்துவப் பணியாளர்கள், அவசரகாலப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை பின்பற்ற மறுக்கும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.