கொரோனா தடுப்பூசி போடும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விளக்கத்தை மருத்துவர் முகமது ஹக்கீம் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
ஒரு சில நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் அதே சமயம் தடுப்பூசி போடும் போது என்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது சிலருக்கு தெரியவில்லை.
அது குறித்து திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் அ முகமது ஹக்கீம் (அவசர சிகிச்சை நிபுணர்), சில விஷயங்களை பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ஒவ்வாமை உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், குழந்தைகள், ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்கள், நாள்பட்ட நோய் உடையவர்கள் தக்க ஆலோசனை இன்றி தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள கூடாது.
அதே போன்று, கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் சில பாதுகாப்பு முறையையும் கையாள வேண்டும்.
தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் பெண்கள் இரு மாதத்திற்கு கர்ப்பம் அடையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, மது சிகரெட் போன்ற பழக்கம் உடையவர்கள், இரண்டு வாரம் முற்றிலும் அதனைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நீர் சத்து உடைய காய்கறி கனி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு தினமும் தண்ணீர் பருக வேண்டும். தேவையான அளவிற்கு தினமும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும்.
கொரோனா நோய் RTPCR சோதனையில் பாசிடிவ் முடிவு பெற்றவர்கள், நோயின் அறிகுறிகள் தீரும் வரையில் அல்லது குறைந்தபட்சம் இரண்டு வார காலத்திற்கு ரத்த தானம் செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.