2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதன் முன்னும் பின்னும் யாரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் டுபாய் மைதானத்திலும் பரவின.
போட்டிக்கு முன்பே இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்று அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் முடிவெடுத்து விட்டார் என்று அவரே கூறியுள்ளார்.
கைகுலுக்காமல் சென்றது பாகிஸ்தான் வீரர்களை வெளிப்படையாக தங்கள் ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தச் செய்தது.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
கைகுலுக்காமல் மறுத்துப் போனதையடுத்து பாகிஸ்தான் தலைவர் சல்மான் ஆகா, போட்டி முடிந்தவுடன் நிகழும் பரிசளிப்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தார்.
இது ஒளிபரப்பாளர்களுக்கானது, அதை பொதுவாக யாரும் புறக்கணிக்க மாட்டார்கள்.
பாகிஸ்தான் அணி ஆட்டம் முடிந்து சில மணி நேரங்கள் சென்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை தாண்டிய பகைமைகளைப் பரிமாறிக் கொண்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் போட்டி இதுவாகும்.
மேலும் இடைப்பட்ட மாதங்களில் போட்டியைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை நிலவியது.
போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற பல அழைப்புகள் இந்தியாவில் எழுந்திருந்தன.
சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “நம் அரசுடன் பிசிசிஐ-யும், நாங்களும் நிற்கிறோம். கைகுலுக்க வேண்டாம் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விளையாடவே இங்கு வந்தோம். விளையாடினோம், பதிலடி கொடுத்தோம்” என்றார்.
கைகுலுக்காமல் போவது ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட்டுக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “வாழ்க்கையில் சில விடயங்களும், சில முடிவுகளும் விளையாட்டு வீரர்களுக்குரிய உணர்வுக்கு அப்பாற்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நிற்கிறோம். இதன் மூலம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் என்றார்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறும்போது, “நாங்கள் கைகுலுக்கத் தயாராகவே இருந்தோம். இந்திய அணியின் செய்கை எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. நாங்கள் கைகொடுக்கத்தான் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஓய்வறைக்குள் புகுந்து கொண்டனர்.
நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளித்தது என்றால், இப்படி முடிந்தது, அதைவிட ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் கைகொடுக்க விருப்பபட்டோம்” என்றார்.