களனி கங்கையில் கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கடந்த 26 ஆம் திகதி நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதி களனி கங்கையில் , சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட மாந்திரீகர், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் , அவர்கள் இருவரும் ஹங்வெல்ல – எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
இதன்போது கடந்த 23 ஆம் திகதி இருவர் மாந்திரீகரை கடத்திச் சென்றுள்ளதாக சந்தேக நபரான பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். எனினும் பெண்ணுக்கும் எல்புல்கம பகுதியில் சாரதியாக தொழில்புரிந்துவரும் நபரொருவருக்கும் இடையில் காணப்பட்ட மற்றுமொரு தகாத தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சாரதி, பனுவஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் ஹோமாகம -பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் , இவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் கொலைச் செய்வதற்காக பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.