தென்னாபிரிக்காவில் ஹொட்டல் ஒன்றின் குளியல் அறையில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த இளம் தம்பதி விவகாரத்தில், அந்த ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் கிழக்கு முனையில் அமைந்துள்ள கிளிபூயிஸ் விருந்தினர் மாளிகையில் கடந்த ஆண்டு இந்த இளம் தம்பதிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த விருந்தின மாளிகையின் குளியல் அறையில் ஜீன் வோஸ்லூ(25) மற்றும் மாரி ஹூன்(28) ஆகியோரின் சடலத்தை அடையாளம் கண்டு இவர்களது நண்பர் ஒருவரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், நீண்ட ஓராண்டு கால விசாரணைக்கு பின்னர் பொலிசார், அந்த ஹொட்டல் உரிமையாளரான 47 வயது கெவின் பிரிட்டோரியஸ் என்பவரை கொலை வழக்கு தொடர்பில் கைது செய்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் Gauteng பிராந்தியத்தை சேர்ந்த ஜீன் வோஸ்லூ மற்றும் மாரி ஹூன் தம்பதி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விடுமுறையை கொண்டாடும் வகையில் நண்பருடன் கிளிபூயிஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி குறித்த தம்பதியின் சடலத்தை ஹொட்டலின் குளியல் அறையில் நண்பரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் நச்சு வாயு சுவாசித்து இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்
பின்னர், ஒரு நச்சுயியல் அறிக்கையில் குறித்த இளம் தம்பதி கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துவிட்டதாகவும், அவர்களின் இரத்தத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான கொடிய வாயு கலந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
சாட்சிகள் மற்றும் நிபுணர்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து, பொலிசார் ஹொட்டல் உரிமையாளர் பிரிட்டோரியஸை இரண்டு கொலை குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தினர்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கெவின் பிரிட்டோரியஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.