இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலி்ல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்தநிலையில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 23.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்துவீச்சில் இந்திய அணியின் மொஹமட் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக 153 ரன்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபாடா, பர்கர் மற்றும் நிகிடி ஆகியோர் தலா 3 வி்க்கெட்டுகளை கைப்பற்றினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமது இர்ண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 36.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதையடுத்து, 79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி பெற்றது.
இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தது.
அத்துடன், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது