வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு அதனைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மணலை ஏற்றியவாறு வந்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். எனினும் கட்டளையை மீறி பயணித்த ஹன்டரின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதனால் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்த ஹன்டர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனையடுத்து அதில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஒருவர் மட்டும் முள் கம்பிக்குள் சிக்குண்டு சிக்கியுள்ளார்.