இந்தியாவில் ஹோலி கொண்டாடிய கும்பலை கண்டித்ததால், பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் உள்ள Mevati Tola பகுதியில், ஒரு இளைஞர் கும்பல் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளது.
அப்போது அவர்கள் மிகவும் கத்தி கூச்சலிட்டு ஆர்பாட்டம் செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் குடிபோதையில் ஆடிக்கொண்டிருந்ததால், யாரும் அவர்களை கேள்வி கேட்க முன்வரவில்லை.
அந்த நிலையில், 60 வயது பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே வந்து அவர்களை கத்தவேண்டாம் என கண்டித்துள்ளார். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
போதையில் இருந்த ஆர்பாட்டக்காரர்கள், முதியவர் என்றும் பாராமல் திடீரென அவரை கற்களாலும், கட்டைகளாலும் தாக்கியுள்ளனர். அவர் பயந்து தனது வீட்டுக்குள் சென்றுள்ளார்.
அப்போதும் விடாமல் வீட்டுக்குள் புகுந்து கடுமையாக தாக்கி அவரை அடித்தே கொலை செய்துள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற வீட்டிலிருந்த 2 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் மூதாட்டி கொல்லப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.